காலச்சக்கரம்
காலமாற்றத்தைக் குறிக்கும் சொல் காலச்சக்கரம். இது காலம்-நேரம் மாறுவதைக் குறிப்பிடுவதோடு, அச்சுழற்சியியுடன் மானிடர்களும் எங்ஙனம் மாறுகின்றனர் என்பதை குறிக்கின்றது.
இருபது வயதில் இதுதான் வேண்டும் என்று தோன்றும்
முப்பது வயதில் இவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்
நாற்பது வயதில் இதுவே போதும் என்று தோன்றும்
ஐம்பது வயதில் இவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை எனத் தோன்றும்
அறுபது வயதில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தோன்றும்
எழுபது வயதில் எதுவும் வேண்டாம் என்று தோன்றும்
கால மாற்றத்தால்… காலச் சுழற்சியால்… பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமாக மாறிவிடும்.
ஆணவம் அதிகாரம் மிரட்டல் எல்லாம் குன்றிக்குறைந்துவிடும்
எது வேண்டும் என்று மிகவும் துடித்தோமோ, அதையே வேண்டாம் என்று ஒதுக்கத்தோன்றும்
எதற்காக ஓடினோம்… எதற்காக ஆசைப்பட்டோம்… எதற்காக எதைச் செய்தோம்… என்ற காரணங்கள் எல்லாமே காலப்போக்கில் மறந்து போகும், மாறிப் போகும், மறத்தும் போகும்.
தீராப்பகையைத் தந்து ஆடவிடுவதும் காலந்தான்; அந்த ஆட்டத்தை அடக்கி ஒடுங்க வைப்பதும் அதே காலந்தான்.
வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும் உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது.
வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
அதற்குப் பல அனுபவங்களைக் கடந்திருக்கவேண்டும்.
அவ்வனுபவங்கள் சொந்த அனுபவங்களோ அல்லது அடுத்தவர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் வழி கிடைக்கும் அனுபவங்களோ, எதுவாக இருப்பினும் அனுபவம் தரும் பாடங்களைக் காலத்திற்கும்-என்றென்றும் மறவாமல் துணைகொள்ளவேண்டும்.
Leave a Reply