புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம்.
கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.
அவை,
கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். போலித்தனமான செயல்களைத் தொடங்கும் சுயநலவாதிகள் பெயரும் புகழும் பெறுவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் அனைவராலும் மதிக்கப்படுவர். ஊரார் பொருளைக் கொள்ளை அடிப்பவர் சாமர்த்தியசாலி எனப் போற்றப்படுவர். நற்பண்புகளில் நம்பிக்கைக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் திறமையற்றவர் என்றும் பேதைகள் என்றும் கருதப்படுவர்.
செல்வம், உடல்பலம், வெட்டிபேச்சு, புகழுரைகள் ஆகியவற்றிற்கு பெருமதிப்பிருக்கும்.
ஒழுக்கம், ஞானம், தவம் போன்றவை இகழப்படும். வாய்ஜாலத்தில் கெட்டிக்காரன் புலவன் என்று போற்றப்படுவான்.
தண்ணீரைக்கூட மக்கள் விலை கொடுத்து வாங்கக்கூடிய நிலை ஏற்படும்.
ஒழுக்கமுடையோர் பெரும் அல்லலுக்கு ஆளாவர். உண்மையான அன்பிற்கு மதிப்பிருக்காது. போலியான ஆசை வார்த்தைகளுக்கே மதிப்பிருக்கும்.
இரும்பு உலோகங்கள் அதிக புழக்கத்தில் இருக்கும்.
குடிப்பழக்கம் பெருமையாகக் கருதப்படும். யாருக்குமே தமது குற்றங்களும் குறைகளும் பெரிதாகத் தெரியாது.
எந்த விஷயத்திலும் தெளிவான அறிவு இருக்காது. விஷயங்களை முறைப்படி அறியவேண்டும் என்ற முயற்சியும் இருக்காது. தானம், உதவி போன்றவை தற்பெருமைக்காகவே பெரும்பாலும் நிகழும்.
கைமாறு என்பதும், செய்நன்றி என்பதும் மறக்கப்படும்.
அனைவரும் ஒருவித மனக்கவலையிலும், சோம்பல் மற்றும் சச்சரவுகளில் சிக்கித்தவிப்பர்.
இதன்மூலம் கலிகாலத்தின் நிலைப் பற்றி (புராணங்களின் வாயிலாக) அறியமுடிகிறது. பெரும்பாலும் இவை சரியாகவும் உள்ளது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
தவறு எங்கே எவ்விதம் என்பதனை அறிந்துகொண்டு அவற்றைப் போக்கும் – சரிசெய்யும் வழிகளை ஆராய்ந்தால் கலிகாலமும் சிறந்த காலமாக அமையும்.
Leave a Reply