கற்றல் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பங்களின் பங்கு

நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம், கற்பிக்கிறோம்.

கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில்-நம் சிந்தையில் ஏற்றுக்கொள்ளல் ஆகும்.

பார்த்தல், கேட்டல், படித்தல் மற்றும் எழுதுதல் என்பதன் வாயிலாக விஷயங்களை எண்ணத்தில் சீர்தூக்கிப்பார்த்து நிறுத்திக்கொள்வதே சிறந்த கற்றலாகும். காதில் ஏற்பதெல்லாம் கற்றல் ஆகாது.

கற்பதற்கு பார்வை, செவித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுதும் திறன் இருந்தால் போதும். ஆனால் கற்பிப்பதற்கு ஐம்புலன்களின் ஒருங்கிணைப்பு மிக அவசியம்.
கற்பித்தலில் மற்றுமொரு முக்கியமான விஷயம் ஏற்கனவே அறிந்ததைக்கொண்டு அறியாததை புரியவைப்பதாகும்.

அன்றைய காலகட்டங்களில் செவிவழிக்கல்வி என்பதே இருந்தது. பின்னர் அக்கல்வி ஏனையோருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் ஓலைச்சுவடிகளிலும் பின்னர் தகடுகளிலும் அச்சேற்றப்பட்டது.
அதன்பின்னர், காகிதங்களின் பயன்பாடு மூலம் கற்றல் கற்பித்தல் செயல் தொடர்ந்தது.

இக்கல்விப்பணியானது அச்சுத்துறை, வானொலி, தொலைக்காட்சி, கணினி மேலும் இணையம் ஆகியவற்றின் மூலம் இனிதே தொடர்கிறது.
உதாரணமாக செய்தித்தாள்களில், போட்டித்தேர்வுகளுக்கான மற்றும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்களுக்கான வினா-விடைகள் ஆகியவையும், அவ்வச்சுத்துறைச்சார்ந்த கல்வி விளக்கக்கூட்டங்கள், மேற்படிப்பிற்கான ஆக்கப்பூர்வ அணுகுமுறைக்கான முயற்சிகள் ஆகியவைகளும் சிறந்த பணிகளாகும்.

வானொலியில் அறிவுசார்ந்த செய்திகள், போட்டிகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் வாயிலாக சில காலங்களுக்கு முன்பு ஒலிமூலமாக மக்கள் பயனடைந்தனர்.

அதன்பின்னர் தொலைக்காட்சி வாயிலாக ஒலி மற்றும் ஒளி மூலமாக தாம் கற்கப்போவதை கேட்டும் கண்டும் கற்றலையும், கற்பித்தலையும் செய்தனர். உதாரணமாக ‘காண்போம் கற்போம்’ போன்ற பல நிகழ்ச்சிகள் உள்ளன.
இவையனைத்தும் ஒருபுறம் இருப்பினும், இன்றைய காலகட்டங்களில் இணைய வழி கல்வி என்பது ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தேடித்தேடி ஓடிச்சென்று கற்ற-கற்பித்தக் கல்வியை இருக்கும் இடத்திலிருந்தே எளிதில் கற்கலாம். உதாரணமாக, தற்காலங்களில் கைத்தொலைபேசி எளிதில் கையாளக்கூடியாதாகவும், எங்கும் சிரமம் இல்லாமல் சுமந்து சென்று, பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

யூ-டியுப், ஸ்கைப், வீடியோ கால் போன்றவைகளின் மூலமாக விரைவாகவும், தெளிவாகவும், விளக்கப்படங்களின் மூலமாகவும், நேரே வகுப்பறையில் அமர்ந்து கற்பது போன்று கற்க இயலுகிறது. மேலும், சில தனியார் அமைப்புகள் நடத்தும் இணைய வழி கல்விமூலமாகவும், கற்று தேர்ந்து சிறந்த பணியில் நம்மை நிலைநிறுத்திக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, உடாசிட்டி, கோர்ஸ்எரா, ஸ்டாண்ட்போர்ட் யுனிவர்சிட்டி வகுப்புகள் போன்றவை சிறந்த பணியினை ஆற்றுகின்றன.

சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பமான தொலைதூர கல்வி அமைப்பு என்பது இன்றைய இணையவழி கல்விக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் கற்றலையும் கற்பித்தலையும் எளிதாக்கியுள்ளனர்.
மேலும், மெரிட் நேஷன், பைஜூஸ் போன்ற இணையதளம் வாயிலாக வழங்கப்படும் கல்வியும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுடையதாக அமைகின்றது.
பள்ளிகளிலும் ஸ்மார்ட் க்லாஸ் என்பதன்மூலம், ஒலி ஒளி அமைப்பினை ஏற்படுத்தி நேரில் சென்று காண இயலாத பல வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களையும், அறிவியல் சார்ந்த பல ஆய்வுகளையும், கணிதக்கோட்பாடுகளின் விளக்கங்களையும் மேலும் பல துறைசார்ந்த விஷயங்களையும் எளிதில் மாணவர்கள் அறிந்துகொள்ள இயல்வது, இன்றைய தொழில் நுட்பங்களின் பெரும்பங்களிப்பென்றால் அது மிகையாகாது. மேலும் தமிழக அரசும் தற்சமயம் மாணவர்களின் பயன்பாட்டிற்கென தொலைக்காட்சிப்பெட்டியில் ஒளிபரப்ப கல்வி ஒளியலைவரிசையை (சேனல்) ஏற்படுத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
தொழில்நுட்பத்தின் வாயிலாக பல வழிமுறைகள் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு ஏற்பட்டிருந்தாலும், ஒரு குருவின் வாயிலாக – ஒரு ஆசிரியரின் மூலமாக கற்கும் கல்வி சிறந்த கல்வியாக அமையும்..

ஏனைய தொழில்நுட்பம் சார்ந்த கல்விமுறைகள், பள்ளிக்குச் சென்று பயில இயலாதவர்களுக்கும், மேலும் பயிற்சித்தேவை என்பவர்களுக்கும், அதேசமயம், பள்ளிக்கு சென்று கற்பிக்க இயலாதவர்களுக்கும் பயன்படுவதாக அமையலாம். குருவின் நேரடி பார்வையின் கீழ் பயில்வது அனைத்திலும் சிறந்தது என்பதினாலேயே இன்றளவும், பள்ளிகளும், ஆசிரியபெருமக்களும் உள்ளனர். இவர்களின் வாயிலாக கற்கும்போது நேரமேலாண்மை, கண்காணிப்பு என்கிற சிறந்த விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன

தொழில்நுட்பங்களின் வாயிலாக கல்வி கற்கும்போது, தேவையானவற்றை மட்டும் இயக்கி கல்விகற்று பயனுறவேண்டும். இடையூறுகளாக அமையும் ஏனைய விஷயங்களை நம் புலன்களுக்கு அனுமதிக்கக்கூடாது.
உலகில் உள்ள எல்லாவற்றிலும் நிறைகளும் உண்டு, குறைகளும் உண்டு.

‘கற்க கசடற’ என்றார் வள்ளுவர். இவ்வாக்கிற்கேற்ப நல்லனவற்றை கற்று ஏற்று தேவையற்றதை தவிர்த்திடுவோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*