உடற்பயிற்சி & உள்ளப்பயிற்சி – 2

நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள்.
அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன.
விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் அவர்களது உள்ளத்திற்கும் உடலிற்கும் பயிற்சி எளிதில் கிடைத்தது.
மேலும் அவர்களை சார்ந்த பெண்களுக்கும், நாற்று நடல், களை பறித்தல், வீட்டிலிருந்து வயலில் வேலைசெய்யும் தத்தம் கணவனுக்கு உணவு சமைத்து கொண்டுசெல்லுதல் என நடைப்பயிற்சி முதல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும் ஆடு மாடுகளை பராமரித்தல் மற்றும் சாணத்தால் வரட்டி தட்டுதல், பால் கறத்தல் மற்றும் பாலைக்கொண்டு தயிர், வெண்ணெய் போன்றவற்றை தயாரித்தல் போன்றதொழில்களில் ஈடுபடுவோருக்கு அவை சார்ந்த உழைப்புகளும் இருந்தன. ஊரை பராமரித்தல், நீர் நிலைகளைப் பராமரித்தல் போன்றவைகளும் உடற்பயிற்சிக்கு ஏதுவாக அமைந்தன.

இவர்களுக்கெல்லாம் இம்மாதிரியான தொழில்கள் அதன்மூலம் உடற்பயிற்சி எனில் பிராமண சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு…?
அவர்களுக்கும் உடற்பயிற்சி இருந்தது. இருபாலருக்கும்.
பிராமண ஆண்கள் சந்தியாவந்தனம் எனும் வேலையை ஒரு நாளின் தொடக்கமாக செய்வர். இதில் பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சியும், அமரும் மற்றும் நிற்கும் முறைகளின் மூலம் யோகப்பயிற்சியும் நடைபெறும். மேலும் வேதம் ஓதுதல் மூலம் அடிவயிற்றிலிருந்து வார்த்தைகளை கொண்டுவருவதால் அதற்குரிய பயிற்சியும் கிட்டுகிறது. சூரிய நமஸ்காரம் என்பதன் மூலமும் கடவுளுக்கும், பெரியவர்களுக்கும் கீழே விழுந்து வணங்குவதன் மூலம் சர்வாங்க (உடற்பகுதி முழுமைக்குமான) பயிற்சி கிடைக்கிறது. நதியில் குளித்தல் மிக முக்கிய பயிற்சியாகும். தியானம் செய்வதிலும் பயிற்சி நடந்தது.  அவ்வாறு நதியில் நீராடவில்லையெனில் கிணற்று நீரை இறைத்து குளிப்பதனால் அதுவும் ஓர் பயிற்சியாகும்.
ஆண்களுக்கு இப்படி என்றால் பெண்களுக்கு, காலையில் வீட்டை சுத்தம் செய்தல், வாசலை பெருக்கி கோலமிடல் என்பதில் சிறந்த உடற்பயிற்சி கிட்டுகிறது. மேலும், மற்றவகை பெண்களை விட இவர்கள் இறைவனுக்கு நைவேத்யம் என தனியாக சமைக்கவும் வேண்டும். மேலும் விசேஷ நாட்களில் உணவுவகைகளில் பெரும் மாறுதல்களும் நிகழும். விதவிதமான உணவுகளை தயாரிக்கவேண்டும். அவ்வுணவுவகைகளுக்காக, மாவு வகைகளை ஏற்பாடுசெய்தல், காய்களை நறுக்கிவைத்துக்கொள்ளுதல், பூஜைக்குரிய சாமான்களை ஏற்பாடுசெய்தல் என பல வேலைகளின் மூலம் அவர்களுக்கு உடற்பயிற்சி அமைகிறது. மேலும் கடவுளுக்குரிய பாடல்களைப் பாடுவதாலும், சுலோகங்களை சொல்வதாலும் மூச்சுப்பயிற்சியும், குரல் வளப் பயிற்சியும் கிடைக்கிறது.
இவ்வாறு சமுதாயத்தின் அனைத்துத்தரப்பினருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் அவரவர்களின் வாழ்வுமுறையை ஒட்டியே அவர்களுடைய உடற்பயிற்சியும் இருந்தது. மேலும் இவை அனைத்தையும் இயற்கையை சார்ந்து உள்ளத்தெளிவோடு இது நமக்கான கடமையென அவர்கள் மேற்கொண்டதால் இவை அனைத்தும் உள்ளத்திற்கும் பயிற்சியாக அமைந்தது எனலாம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர், தங்களது சமூகம் சார்ந்த விஷயங்களை தள்ளிவைத்துவிட்டு, மற்றவற்றை செய்கின்றனர். மேலும், ஏதேனும் ஒரு சாதனத்தின் (கணினி, கைப்பேசி) மூலமாக மற்ற நாட்டவர்க்கு அந்நாட்டின் நேர நிலவரப்படி வேலை செய்கின்றனர். இதன்மூலமாக தான் இருக்கும் மற்றும் வாழும் சூழலுக்கு மாறாக பணிபுரியும் நிலையில் உள்ளனர். இதனால் அவர்களின் உடற்செயல்களுக்கு ஏற்றார்போல் உள்ளமும், உள்ளத்திற்கு ஏற்றார்போல் உடலும் செயல்பட போராடுகிறது. இதன் காரணமாக இயல்பாகவே அமையவேண்டிய கிடைக்கவேண்டிய உடல் மற்றும் உள்ளப்பயிற்சி கிடைக்காமல் போகிறது. அதனால்தான் யோகநிலையங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் என, தான் ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பெரும் பகுதியை செலவழிக்கின்றனர். அதில் ஒரு பயனும் இல்லை என விரக்தியும் பலர் அடைகின்றனர். அன்றைய நாட்களில் அனைவரும் இயற்கையை ரசித்துக்கொண்டு அதன்மூலம் உள்ளத்திற்கும், அன்றாட செயல்களின் மூலமாக உடலிற்கும் பயிற்சியைப் பெற்றனர். இன்றைய நாட்களில் வெகுசிலரே அவ்வாறு உள்ளனர்.

வசதிகள் பல கூடினாலும் நமக்கான நேரத்தை நமக்காக நம்மால் செலவிடமுடியவில்லை என்பதே உண்மை.
காலத்திற்குஏற்றார்போல் வாழவேண்டிய கட்டாயத்தில் பலர் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*