அக்கினிக்குஞ்சு
– பாரதியார்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
பொருள்:
1.(விடுதலை வேட்கையை / சமுதாயத்தை உத்தேசித்து)
பிற நாட்டினரின் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் விடுதலை எனும் தீப்பொறியை ஏற்றி வைத்தேன். அதன் தாக்கத்தால் அனைவரது மனங்களிலும் படர்ந்திருந்த அடிமைத்தனம் எனும் காடு அழிந்தது. அடிமைத்தனக் கொடுமையில் ஆட்பட்டு அதிலிருந்து மீள முயல்வோர்க்கு சிறு பொறியளவிலான விடுதலை வேட்கையே போதுமானது. அச்சிறு பொறி பல்கிப்பெருகி அதன் தாக்கத்தால் அடிமைத்தளை நீங்கும். இவ்வாறான சிந்தனையில் இப்பாடல் பாடப்பட்டிருக்கலாம்.
மற்றொரு கருத்து;
2.(ஆன்மீகம் / வாழ்வின் தன்மையை உத்தேசித்து)
மனம் ஒரு காடு, அழுக்காறுகள் அதில் உள்ள மரங்கள், இதில் ஒரு மரத்தின் பொந்தில் ஞானத்தீயின் ஒரு சிறுபொறியை வைத்தேன். அந்நெருப்புப் பொறியின் தாக்கத்தால் அம்மரங்கள் அடர்ந்த அக்காடு அழிந்தது. அதாவது மன அழுக்குகள் அனைத்தும் அழிந்து ஒழிந்தது. ஞானவேட்கையில் ஆட்பட்டு தெளிவுபெற முனைவோர்க்கு சிறு பொறியளவிலான ஞானமே போதும். அதன் தாக்கத்தால் மனசஞ்சலம் அனைத்தும் தீரும்.
இப்பாடல் குறித்து மேலும் மேலான விளக்கங்கள் இருந்தால் பகிரவும்.
Leave a Reply