வாலிபப்பருவம் – விடலைப்பருவம்
வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம்.
அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம்.
இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் பல சங்கடங்களை ஏற்படுத்துகின்றன.
நம்மைப்பற்றி யாருக்கும் அக்கறையில்லை எனவும், எதற்கெடுத்தாலும் நம்மைக் குறைக்கூறுகிறார்கள் என்றும், எல்லாவற்றிற்கும் அறிவுரை வழங்குகின்றனர் எனவும், ஒத்தவயதுடையவருடன் அல்லது உடன் பிறந்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பேசுகின்றனர் என்றும் பல மனக்குறைகள் இவ்வயதினருக்கு உண்டு.
பெற்றோரும், ஆசிரியர்களும் இவ்வயதினைக் கடந்துவந்துள்ளக் காரணத்தால், இவ்வயதொத்தவர்களைக் கண்டிக்காமல், குழப்பாமல் நல்லனவற்றை எடுத்துரைக்கலாம். புகழ்ச்சிக்கு மயங்காதவர்களே இல்லை. அவ்வப்போது ஒரு கீரிடத்தைச்சூட்டி பிறகு அதனுடன் இலவச இணைப்பாய் அறிவுரை வழங்கினால், உடனே அவ்வறிவுரை ஏற்கப்படும்.
வெளியில் சந்திக்கும் மன உளைச்சல்களையும், உடலளவில் சந்திக்கும் மாறுதல்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுடன் நமது உறவுமுறை இருத்தல் அவசியம்.
நமது அக்கறையை அன்பில் கலந்து தரவேண்டும். கண்டிப்பில் அல்ல.
தன்னைத்தானே பெரியமனிதனாக/மனிஷியாக எண்ணிக்கொள்ளும் காலகட்டம் இது. எனவே அவர்களது எண்ணத்தினைஒட்டியே அவர்களை நல்வழிபடுத்தலாம்.
இக்காலகட்டத்தில், காலம், படிப்பு, உழைப்பு, மானம், தன்மானம், பணம் இவற்றின் மதிப்பை அவர்கள் உணர்ந்தால் போதுமானது.
பெரியோர்கள் தாங்கள் சந்தித்த மற்றும் சந்திக்காத பல விஷயங்கள் அடுத்தடுத்த காலகட்ட மக்கள் சந்திக்கின்றனர். அதற்கேற்பவே பெரியோர்கள் இப்பிள்ளைகளை அணுகவேண்டும்.
அக்காலகட்டத்தில் சுமார் 15, 20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலானோர் தவறிழைக்க நேர்ந்தால், மற்றவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பர் எனவும், சிறிது குரலுயர்த்தி பேசினாலும் அடுத்தவீட்டில் இருப்போர் ஏதேனும் சொல்லக்கூடும் என்றும் அஞ்சுவர்.
ஆனால் இக்காலகட்டத்தில், பெரும்பாலான பிள்ளைகளுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. தாங்கள் சொல்வது, செய்வதும் சரி எனவும், யாரேனும் ஏதேனும் கூறமுற்பட்டால், உனக்கென்ன கவலை? , உனக்கென்ன பிரச்சனை? என்றும் இதற்கும் மேலே நீ யார் என்னைக் கேட்க? எனவும் சர்வசாதாரணமாக கேட்கின்றனர்.
இவ்வாறான நிலை ஏற்பட பெரியவர்களே பெரிதும் காரணம். தங்களின் மதிப்பை அப்பிள்ளைகளின் முன்னே தொலைக்கின்றனர். தங்கள் தவறுகளைத் தெரிந்தபின்னரும் திருத்திக்கொள்ள மறுக்கின்றனர். எவற்றை செய்யவேண்டும், எவ்வெவற்றையெல்லாம் தவர்க்கவேண்டும் என பல பெரியோர்களுக்கே தெரிவதில்லை. அதனால் பிள்ளைகளும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறுகின்றனர்.
எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே – அது
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை, தந்தை மற்றும் ஆசான் வளர்ப்பதிலே.
விடுகதைத் தொடரும்………
Leave a Reply