எண் – 1
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வாசகத்தின்படி மனிதருக்கு கண்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கும் மேலே எண்ணும் எழுத்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அங்கஹீனர்களான மாற்றுத்திறனாளிகளாயினும் அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பனவற்றில் சிறந்தது அவர் கற்றக்கல்வியே ஆகும்.
இவ்வாறான சிறப்புகள் மிக்க எண் எழுத்தில், எண்களின் சிறப்பைப்பற்றி ஓரளவு அறிய முற்படுவோம்.
முதலாவதாக, எண் 1-ஐப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
கணிதம்:
1. ஒன்று என்பது எண்களில் மதிப்புடைய முதல் எண்ணாகும்.
2. ஒருவர் மற்றவருடன் சேர்ந்தால் பலம் அதிகரிப்பதுபோல், எண் ஒன்று மற்றயெண்களுடன் சேர்கையில் அச்சேரப்பெற்ற எண்ணின் மதிப்பு அதிகரிக்கிறது.
3. மற்றயெண்களுடன் பெருக்கினாலும், வகுத்தாலும், அப்பெருக்கப்படும், வகுபடும் எண்களின் மதிப்பு மாறுவதில்லை. இச்சமயங்களில் நிறம், வடிவம் அற்ற நீரைப்போல், எண் 1 திகழ்கின்றது.
4. எண் ஒன்று முதலாவது முக்கோண எண்ணாகும்.
5. எண் 1 முதலாவது சதுர எண்ணாகும்.
இவையனைத்தும் கணித முறையில் எண் 1-இன் சிறப்புகள் ஆகும்.
ஆன்மீகம்:
ஆன்மீகமுறையில் எண் 1-இன் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம்.
1. இறைவன் ஒன்றே என்ற கருத்தை வெளிப்படுத்த உதவுவது எண் 1
2. அவ்விறைவனின் முன் அனைவரும் ஒன்றே என்பதனையும் எண் 1-ஐப் பார்க்கையில் உணர்வதாக ஆன்மீக அன்பர்கள் உரைப்பர்.
3. கணவன் – மனைவி பேதமில்லாமல் இணைவதே வாழ்க்கை எனும் தத்துவத்தை உணர்த்த சிவன் உமையுடன் சேர்ந்து உமாமஹேஷ்வர கோலத்தில் ஒன்றாய் இருக்கிறார்.
4. மேலும் சைவ-வைணவ சச்சரவுகள் நீங்க சிவ-விஷ்ணு ஒற்றுமையை பக்தர்களுக்கு உணர்த்தி ஹரி-ஹரன் என்று ஓர் உருவாய் காட்சியளித்ததனாலும் ஒன்றிற்குப் பெருமை. ஹரியும் சிவனும் ஒன்னு அரியாதார் வாயில் மண்ணு என்று பழமொழி ஒன்றுண்டு.
5. ஆதியை தொடக்கத்தை உணர்த்துவதும், ஏகாந்தத்தை உணர்த்துவதும் எண் ஒன்று ஆகும்.
பொது:
1. ஒற்றுமையை உணர்த்தும் எண், ஒன்று.
2. இதற்கு நேரெதிரான தனிமை உணர்த்தும் எண்ணும் ஒன்றுதான். தனித்திருத்தல் எனில் ஒற்றை ஆளாய் இருத்தல் எனப்பொருள்.
3. எளிமையான எண்ணாக இருப்பது ஒன்று.
4. ஆரம்பம் என்பதை உரைக்கும் எண், 1.
5. எழுதப்பழகும் குழந்தைகள் முதலில் எளிதாக எழுதும் எண், ஒன்று ஆகும்.
ஒன்றின் சிறப்பை ஒன்றாய் அறிந்தோம்.
Leave a Reply