விடுகதையா இந்த வாழ்க்கை? – குழந்தைகள்

குழந்தைகள்-(தொடர்ச்சி)

குழந்தைகள் காணும் உலகம், மிகவும் அதிசயமானது. அவர்கள் ஒவ்வொன்றையும் கண்டு பிரமிக்கின்றனர். அவ்வுணர்வை உடனே வெளிப்படுத்தத் துடிக்கின்றனர். அத்தகு உணர்வுகளினூடே பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர்.

அவற்றிற்கெல்லாம் தக்க பதிலாக உண்மையான பதிலாக, எவ்வித சமாளிப்பும் இல்லாத பதிலாக பெற்றோரின்/பெரியோரின் பதில் இருக்கவேண்டும்.

அக்கேள்விகளை தொணதொணப்பென்று நாம் நினைத்தால், பிற்காலத்தில் நம் கேள்விகளை அவர்கள்  முணுமுணுப்பென்பர்.

ஏன், எதற்கு என்கிற கேள்விகள் பல கொண்டுள்ளவர்களே குழந்தைகள்.

முற்காலத்தில் தவழும் பிராயத்தில் இருக்கும் குழந்தையிடம், பல்வேறு விதமான பொருட்களைக்காட்டி, அவற்றில் அக்குழந்தை எதனைப் பிடிக்க(தன் கையால் பிடிக்க) முயற்சிக்கிறது, எனப் பார்த்து, அதன்மூலம் அக்குழந்தைக்கான ஆர்வம் மற்றும் எதிர்கால வாழ்வு குறித்து தீர்மானிப்பது என்ற ஒரு செயல் வழக்கத்தில் இருந்ததாக அறியமுடிகிறது.

இன்றைய காலகட்டத்தில் அவ்வாறு எவரும் சோதிப்பதாய் தெரியவில்லை. பெரும்பாலான பெற்றோரே தம் குழந்தை/குழந்தைகளின் எதிர்கால வாழ்வு குறித்துத் தீர்மானித்து, அவற்றை அக்குழந்தையின் மேல் திணிக்கின்றனர்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு தன்னைச் சுற்றி, தன்னை முன்னேற்றிக்கொள்ள என்னென்ன சந்தர்ப்பங்கள் உள்ளன, என்பனபற்றிய தெளிவில்லை. மேலும் சிலருக்கு அவற்றை சரிவர பயன்படுத்த சந்தர்ப்பங்கள்/சூழ்நிலைகள் அமைவதில்லை.

குழந்தைகளின் வாழ்க்கை அமைப்பை-எதிர்காலத்தை விதி/தலையெழுத்து என எவ்வாறு உரைத்தாலும், பெற்றோரும் உற்றாரும்  குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட தம்மாலான முயற்சிகளைக் கைவிடக்கூடாது.

விடுகதைத் தொடரும்….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*