எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணங்கள் வண்ணங்கள்

ஆளுமை:
தன்னை ஆளத்தெரிந்தவரே மற்றவரையும், வேலையும் சிறப்பாக ஆளுவார். தன்னை ஆளுவதென்பது, எண்ணங்களையும், செயல்களையும், நேரத்தையும், உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது.

ஒரு குழந்தையின் ஆளுமை சுமார் அதன் ஐந்து வயதிற்குள் அமைந்துவிடும். நல்ல அன்பு, பரிவு, வழிநடத்தல், நேர்மறை சிந்தனை, ஊக்கம் முதலியவற்றுடன் வளரும் குழந்தைகள் சிறந்த நிலையான ஆளுமையுடன் வாழும்.

கடுஞ்சொற்களுக்கும், அதிக தண்டனைகளுக்கும், பெரும் கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படும் குழந்தைகள் பயம், தன்னம்பிக்கையின்மை, சுய கருத்து இன்மை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டு ஆளுமைத்திறனை இழக்க நேரிடும்.

குழந்தைகள் பயமின்றியும் தயக்கமின்றியும் அனைத்தையும் செய்யத்துணிகின்றனர். பெரியவர்களால் எடுத்துச்சொல்லாப்பட்டாலன்றி அவர்கள் செயல்களால் தோன்றும் நன்மை தீமையோ, துன்பம் மகிழ்வோ அவர்களுக்குத் தெரிவதில்லை.

மேலும் குழந்தைகள் எவரிடத்திலும், எளிதில் எந்த ஒரு விஷயம் குறித்தும் தயக்கம் ஏதுமின்றி கேள்விகள் கேட்கின்றனர். தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் சற்று வயதாகிவிட்டால், பெரும்பாலோர் தங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்கத் தயங்குகின்றனர். இவ்வாறு கேட்டால் நம்மைப்பற்றி என்ன நினைப்பரோ, ஏளனம் செய்வரோ என்றெல்லாம் எண்ணி சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள தயங்குகின்றனர். வாழ்க்கையே கற்றல் கற்பித்தலின் பாதைதான். கற்போம், கற்பிப்போம்.

எண்ணங்கள் தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*