திருவெம்பாவை – பாசுரம் 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
– மாணிக்கவாசகர்.
விளக்கம் :
சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில், ‘முகேர்’ என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய்.
சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு, உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!
Leave a Reply