திருவெம்பாவை – பாசுரம் – 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம்.
எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்;
எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம்,
எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம்.
திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம்.
நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம்.
இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக
Leave a Reply