திருவெம்பாவை – பாசுரம் – 19
உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
– மாணிக்கவாசகர்
விளக்கம் :
எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று திருமணத்தின் போது பெண்ணைப் பெற்றோரால் வழங்கப்பட்டுவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் துணைவர் சிவபக்தராய் இருத்தல்வேண்டும்; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்கவேண்டும்; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்கவேண்டும்; உமது பக்தர்கள் மட்டுமே எங்களை எப்பொழுதும் சூழ்ந்திருக்கவேண்டும். எங்கள் பார்வையில் தீமைகள் ஏதும் படாமல் இருத்தல் வேண்டும். நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?
Leave a Reply