திருவெம்பாவை – பாசுரம் 6
மானேநீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய்
ஊனே உருகாய்! உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர்
விளக்கம் :
(வந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பிக் கூறுவது)
மான் போன்றவளே! நீயே வந்து எங்களை எழுப்புவதாக நேற்று சொன்னாயே, அந்தச் சொல் காற்றில் எத்திசையில் போய்விட்டது? உனக்கு மட்டும் இன்னும் புலரவில்லை போலிருக்கிறது. தேவர், மனிதர் மற்றும் பிறர் யாராலும் அறியமுடியாத சிவபெருமான், தாமே வலிய வந்து எங்களை ஆட்கொண்டான். நீண்ட கழல் அணிந்த அவனது திருவடிகளைப் பாடிவந்த எங்களுக்காக உன் வாசலைத் திறக்கவில்லை. சொல் தவறியதற்காக வருந்தவும் இல்லை. இது உனக்கு தகுந்ததா? எங்களுக்கு மட்டுமல்லாமல் உனக்கும் தலைவனாக இருப்பவனை நீயும் எங்களுடன் கலந்து பாடி மகிழ்வாய்.
Leave a Reply