திருவெம்பாவை – பாசுரம் 5
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர்
விளக்கம் :
(வந்தவர்கள், உறங்கியவளை எழுப்பிக் கூறுவது)
திருமால் அறியமுடியாத, பிரம்மாவும் கண்டுகொள்ளமுடியாத பெரும் சிறப்பினையுடைய சிவபெருமானை நாம் அறிந்து கொண்டோம் என்பதுபோன்ற பொய்களையே பேசுகின்ற பாலூறும் தேன் வாயையுடைய வஞ்சகீ, கதவைத்திற, மண்ணும் விண்ணும், பிற உலகங்களும் அறிவதற்கு அரியவனான சிவபெருமானின் பெருமையையும், அவர் நம்மைக் காக்கும் கருணைத் திறத்தையும் பாடி, ‘சிவனே, சிவனே’, என்று நாங்கள் அழைப்பது கேட்டும் நீ எழவில்லையே, நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே! எழுந்து வா!
Leave a Reply