திருவெம்பாவை – பாசுரம் 4
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர்
விளக்கம் :
(வந்தவர்கள் உறங்கியவளை எழுப்பி)
ஒளி வீசும் முத்துக்கள் போன்ற பற்களை உடையவளே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?
(உறங்கியவள்)
அழகிய வண்ணம் கொண்ட கிளிபோன்று பேசும் நம் தோழியர் எல்லோரும் வந்துவிட்டனரா?
(வந்தவர்கள்)
எண்ணிப்பார்த்து உள்ளவாறு சொல்கிறோம். எல்லோரும் வந்துவிட்டார்கள். தேவர்களுக்கு அமுதம் போன்றவனும் வேதங்கள் பாடும் மேலான பொருளானவனும் காட்சிக்கு இனியவனுமான சிவபெருமானை, உள்ளம் கசிந்து மனம் உருகிப் பாடவேண்டாமோ? எனவே தூங்கிக் காலத்தை வீணாக்காதே. வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப்பார். குறைவாக இருந்தால் மீண்டும் போய்த் தூங்கு.
Leave a Reply