திருவெம்பாவை – பாசுரம் 3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்
அத்தன்! ஆனந்தன்! அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய்! வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்!
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ?
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர்
விளக்கம் :
‘முத்துபோன்ற பெண்பற்களைக் காட்டி முறுவலிப்பவளே! முன்பெல்லாம் நீ எங்களுக்கு முன்னால் எழுந்து வந்து சிவபெருமானை, ‘தந்தையே, ஆனந்த வடிவினனே, அமுதமயமானவனே’ என்றெல்லாம் நாவில் நீர் ஊறித் தித்திக்கும்படிப் பேசுவாயே! இன்று ஏன் இன்னும் தூங்குகிறாய்? கதவைத் திற’. (என்று வந்த கன்னிகைகள் கூற…)
(உறங்கிய அப்பெண் கூறுகிறாள்)
‘நீங்களெல்லாம் சிவபெருமானிடம் உண்மைப் பற்றுடையவர்கள்; சிவபக்தியில் நீண்ட நாள் பழக்கமுள்ளவர்கள். நானோ புதியவள். எனது இந்தச் சிறிய தவறைப் பொறுத்துக்கொண்டால் என்ன கேடு வந்துவிடும்? என்னிடம் அன்பு கொண்டதாக நீங்கள் காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் வாயளவில்தானா? இல்லவிடில் எனக்கு நல்வழி காட்டி என் தவற்றைப் போக்கியிருக்கலாமே?’
(வந்தவர்கள்)
‘உன் அன்பு பொய்யானதல்ல, அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். உன்போல் தூயமனம் பெற்றவர்கள் சிவபெருமானைப் பாடாமல் இருக்கமாட்டார்கள் என்பதற்காகவே உன்னை அழைத்தோம். உன்னை எழுப்பவந்த எங்களுக்கு இவ்வளவும் தேவையே.’
Leave a Reply