திருவெம்பாவை – பாசுரம் – 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
– மாணிக்கவாசகர்
விளக்கம் :
தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடியிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண்களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின. சூரியன் தோன்றியதால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி மறைய, அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், இருபிறப்பாளராகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி பூக்கள் மிதக்கும் இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.
Leave a Reply