திருவெம்பாவை பாசுரம் – 14

திருவெம்பாவை – பாசுரம் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

                                                                                                             – மாணிக்கவாசகர்

விளக்கம் :

காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்தபாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*