திருவெம்பாவை – பாசுரம் 2

திருவெம்பாவை – பாசுரம் 2

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்!
சீசீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்!

– மாணிக்கவாசகர்

விளக்கம் :

(தூங்குகின்றக் பெண்ணை எழுப்ப வந்தவளுள் ஒருத்தி)

சிறந்த ஆபரணங்களை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் கூடிப்பேசும்போது, ‘என் அன்பெல்லாம் சிவபெருமானுக்கே’ என்று கூறுவாய்; ஆனால் மலர்நிறைந்த இந்தப் படுக்கையில் இப்போது உன் நேசமெல்லாம் வைத்தாயோ?’

(இதைக் கேட்டு உள்ளிருப்பவள் கூறுவது)

‘சிறந்த ஆபரணங்களை அணிந்த தோழியரே! சீசீ! இவ்வளவுதான் உங்களால் பேசமுடியுமா! விளையாடவும் ஏசவும்(திட்டவும்) இதுவா இடம்?’

(அவள் சொன்னதைக் கேட்டு எழுப்ப வந்த பெண்கள் கூறுகிறார்கள்)

‘தேவர்களும் வணங்குவதற்குக் கூசி நிற்கின்ற தமது மலர்ப்பாதங்களைத் தந்தருளத் தாமே தில்லைச் சிற்றம்பலத்துள் எழுந்தருளியிருக்கிறான் ஒளிவீசிப் பொலிகின்ற சிவலோக நாதனான எம்பெருமான். அவருக்கு நமது அன்பு எங்கே! நாம் எங்கே!’

(இவ்வாறு வேடிக்கையும் விளையாட்டுமாக அல்லவா நாம் பொழுது போக்குகிறோம்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*