திருவெம்பாவை
பாசுரம் – 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர்
விளக்கம் :
அகன்ற ஒளி பொருந்தியக் கண்களை உடையவளே! முதலும் முடிவும் இல்லாதவனும் அரிய பெரிய சோதி வடிவினனுமாகிய சிவபெருமானை நாங்கள் பாடுவது கேட்டுமா இன்னும் நீ உறங்குகிறாய்? உன் செவிகள் கேட்கும் சக்தியற்றுப் போய்விட்டனவா?
நாங்கள் தெருவில் மகாதேவனின் திருவடித் தாமரைகளைப் போற்றிப் பாடுவது கேட்டதும் ஒருத்தி பக்தி மேலீட்டினால் விம்மிவிம்மி மெய்மறந்து மலர் நிறைந்த படுக்கையிலிருந்து கீழே புரண்டு, செயலற்றுக் கிடந்தாள். ஆனால் நீ இன்னும் எழாமல் உறங்கிக்கொண்டிருக்கிறாயே? இது என்ன விந்தை! எழுந்து வா.
Leave a Reply