நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும்
உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு:
கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து,
‘யாதினும் இனிய நண்ப!
எல்லாப் பொருள்களினும் இனிமையான
நண்பனே; என்பார்.
நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் வெளிப்படுத்துகிறார்.
கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் காணாமலேயே சிறந்த நட்பு கொண்டிருந்தனர் என்பது இலக்கியம் வழி அறியமுடிகிறது.
சிறந்த நட்பு:
பெற்றோரும் உறவினரும் நம் நலனிற்கும் மேன்மைக்கும் முயற்சிகள் பல மேற்கொண்டு உதவுவர், அதேபோல் சிறந்த நண்பர்களும் நம் முன்னேற்றத்திற்கு துணைநிற்பர்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
அகநக நட்பது நட்பு” (குறள்-786)
எனும் குறள் அளித்த வள்ளுவரின் வாக்குப்படி, முகத்தைக்கண்டவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நல்ல நட்பன்று, மனதால் நினைத்தாலே மகிழ்ச்சி தோன்றும் அளவிற்கு அமைந்த நட்பே சிறந்த நட்பாகும்.
வாழ்வும் நட்பும்:
‘உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’ (குறள்-788)
என்பதற்கிணங்க துன்பம் வரும் நேரத்தில், அத்துன்பத்தைப் போக்க உடனடியாக உதவுபவராக நண்பர் விளங்கவேண்டும்.
நண்பனின் எழுச்சியில் மகிழ்ந்து, வீழ்ச்சியில் துவளாத வண்ணம் துணை நிற்கும் நட்பே சிறந்த நட்பாகும். நண்பனது நலனையும் அவனது குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படும் நட்பு அனைவராலும் போற்றப்படும். வீண் கேளிக்கைகளிலும், நேரத்தை வெறுமே போக்குவதிலும், நட்பு எனும் சிறந்த உறவைப் பயன்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு, நட்பிற்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்.
Leave a Reply