பஜகோவிந்தம் – 1
அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று.
கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார்.
ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது. இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் முதல் வார்த்தையே இதற்குத் தலைப்பாய் அமைந்துள்ளது.
பிற்காலத்தில் தோன்றிய ஆழ்வார்களின் பாசுரங்களின் ஒவ்வொருத் தொகுதியின் தலைப்பும் அப்பாசுரத்தின் முதல் வார்த்தையைக்கொண்டு அமைந்துள்ளதைக் காணலாம்.
பஜகோவிந்தம் பொருளுடன்
பஜகோவிந்தம் – 1
கோவிந்தனை பஜனை செய்!
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே! |
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ் கரணே ||
பதவுரை:
பஜ கோவிந்தம் – கோவிந்தனை நினைத்திரு
பஜ கோவிந்தம் – கோவிந்தனை துதி செய்
பஜ கோவிந்தம் – கோவிந்தனை மனத்தால் நினை
மூடமதே! – ஓ மூடமதியே!
ஸம்ப்ராப்தே – வந்துவிட்டபோது
ஸந்நிஹிதே – நெருங்கியதான
காலே – காலமானது (மரண காலமானது)
நஹி நஹி ரக்ஷதி – காப்பாற்றவே காப்பாற்றாது
டுக்ருஞ் கரணே – டுக்டுஞ் கரணே முதலான இலக்கண பாடங்கள்
கருத்து:
ஹே மூடனே! கடவுளை எப்பொழுதும் மனத்தாலும், வாக்காலும், செயல்களாலும் நினைப்பதை, துதிப்பதை விட்டு, ‘டுக்ருஞ் கரணே’ முதலான இலக்கணப் பாடல்களைப் பொருள் அறியாமல் படிப்பதால் பயனில்லை. அது இறுதி காலத்தில் உன்னைக் காப்பாற்றாது. ஆகவே, கோவிந்தனையே உனது மனோ,வாக்,காயங்களால் (மனம், வாக்கு,செயல்) எப்பொழுதும் பஜனை செய்துகொண்டிரு என வழிநடத்துகிறார் ஆதிசங்கரர்.
பஜிப்பது தொடரும்…
Leave a Reply