மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம்.
பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும்.
இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி
தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை.
கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம்.
எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் பெறும்போது மௌனம் ஆனந்தம்.
பிடிக்காத விஷயங்களை ஒத்துக்கொள்ளாதபோது மௌனம் எதிர்ப்பு.
செய்யாத தவற்றிற்கு மறுப்புரைக்க வாய்ப்பேதும் இல்லாது தண்டனைப்பெறும்போது மௌனம் அவமானம்.
நமக்கு வேண்டப்பட்டவரே நாம் பெரிதும் மதிப்பவரே தம் சொல்லாலும் செயலாலும் நமக்கு துன்பத்தைத் தரும்போது ஏற்படும் மௌனம் வேதனை.
நம்பிக்கை துரோகம் செய்து வாழ்வைக் கெடுத்தவர்களை நேரில் காணும்போது மௌனம் ஆத்திரம்.
நம்மைவிட்டுப் பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும்போது மௌனம் துக்கம்
உடலோ மனமோ சோர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம் உறக்கம்.
உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க உடலோ அசைவில்லாமல் அயர்ந்திருக்கும் சூழலில் மௌனம் மரணம்.
Leave a Reply