மொழி என்பது ஒருவரை மற்றவரோடு இணைப்பது. கருத்துக்களை எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க ஏற்பட்டது.
இந்த மொழியானது முதலில் சைகையில் ஆரம்பித்து பின் பேச்சு வாயிலாகவும், எழுத்து வாயிலாகவும் மேம்பட்டது.
இன்றளவும் இம்மூன்று முறைகளும் வழக்கில் உள்ளன. ஆனால் சில மொழிகள்தான் வழக்கில் பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.
உலகில் பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரவர் தத்தம் தேவைகளுக்கேற்ப மொழிகளைக் கற்றுக்கொண்டு பயன்படுத்துகின்றனர்.
இதில் நாம் பயன்படுத்தும் மொழி உயர்ந்து என்றோ நாம் பயன்படுத்தாமல் விட்ட மொழிகள் தாழ்ந்தது என்றோ கருதுவது இழிவானது.
நமக்கு தெரியாத மொழியை பேசுவோர் நம்மை சுற்றி இருந்தாலோ, அல்லது பாஷை தெரியாத ஊருக்கு நாம் சென்றாலோ அச்சூழ்நிலையை அனுசரிக்கவும், நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக்கொள்ளவும் சில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இது தவிர்க்க இயலாத ஒன்று. அச்சூழலில் நாம் நமது மொழி அறியாமை என்கிற விஷயத்தைக் கருத்தில் கொள்ளவேண்டுமே அன்றி, அங்குள்ள மொழியை இழிவாக பேசக்கூடாது. நமக்கு ஒரு விஷயம் தெரியாது என்பதனால் அது தாழ்ந்தது என கருதக்கூடாது.
தற்போதுள்ள சூழலில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சமஸ்க்ருதம் எனும் மொழி இப்பொழுது பெரும்பாலும் பேச்சுமொழியாக வழக்கில் இல்லை. ஏனெனில் இந்நாட்டில் ஆதிக்கங்கள் மாறி மாறி நிகழ்ந்தன. வந்தேறிகளால் கொணரப்பட்ட மொழிகள் நாட்டில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டன. காலப்போக்கில் பல பழக்கவழக்கங்கள் மாறியதைப்போல மக்கள் பயன்படுத்தும் மொழியும் மாறியது.
மேலும் இந்தியர்களுக்கு விட்டுக்கொடுத்தல், அனுசரித்து வாழ்தல் என்பது மிகவும் பழக்கமானது. அதனால் தமக்கென உண்டானது அனைத்தையும் வந்தேறிகளுக்காக விட்டுக்கொடுத்து, அனுசரித்து முடிவில் சுயத்தை இழந்து வாழ்கின்றனர்.
மொழிகளின் வயதறிய எளிய ஒரு முறை உண்டு. யாதெனில், அம்மொழியில் தோன்றிய இலக்கியங்கள், நூல்கள் ஆகியனவற்றைப் பற்றி அறிதலாகும். நம் முன்னோர்கள் தாங்கள் வாழ்ந்த காலங்களில் பயன்படுத்திய பலவற்றை தம்பின்வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதில் ஒன்றுதான், அவர்கள் காலத்தில் அவர்களால் இயற்றப்பட்ட நூல்கள்.
இவ்வாறான சில ஆதாரங்களின் வாயிலாக பண்டைய காலத்தில் தோன்றிய வழக்கில் இருந்த மொழிகளைப்பற்றியும், பழக்கவழக்கங்களைப் பற்றியும் அறிந்துகொண்டு, அதன்பின் எம்மொழி முந்தையது எம்மொழி பின்தோன்றியது என்பதனை அறிந்துகொண்டு அதன்பின் வாதிடுவோர் வதிடலாம்.
நாம் எம்மொழியை பழக்கத்தில் கொண்டிருந்தாலும், பிற மொழிகளை கற்க, தெரிந்துகொள்ள இயலவில்லை எனினும் அம்மொழிகளையும், அம்மொழிகளைப் பேசுவோரையும் மதிக்கவாவது தெரிந்துகொள்வோம்.
அனைத்து மொழிகளுமே உயர்ந்தது. சிறப்பானது. தன்னிகர் இல்லாதது.
Leave a Reply