பெற்றோரும், ஆசிரியரும்

நம்மைச் சுற்றியுள்ள இச்சமுதாயத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
முன்பெல்லாம் ஓரிருவரைத் தீயோர் என சுட்டிக்காட்டிட முடிந்தது. அவர்களும் சில காரணங்களாலேயே தீயோராய் நடந்துகொண்டனர்.

இவற்றை இதிகாசம், புராணம் வழியாகவும், நம் மூதாதையரின் அனுபவங்களாலும் அறியலாம்.

ஆனால் தற்சமயம், நம்மில் மிகச்சிலரையே, சில கால அளவு வரைமட்டுமே நல்லவர் என அடையாளம் காட்டமுடிகிறது. சில காலங்களுக்குள்ளாகவே அவர்தம் ரூபத்தை மாற்றிக்கொள்கிறார். அதற்கு ஒப்புசப்பற்ற காரணங்கள் வேறு…

தவறு செய்வது மனித இயல்பே ஆனாலும், அதனை தெரிந்தே செய்வதும், மீண்டும் மீண்டும் திமிருடன் செய்வதும் எவ்வித நியாயம்?

அவற்றை சரியென வாதடுவதும், உனக்கென்ன என எதிர் கேள்வி கேட்பதும் மிகச்சாதரணமாகிவிட்டது.

அறிவார்ந்த தர்க்கங்கள் குறைந்து, அறிவற்ற அனர்த்தங்கள் அதிகரித்துவிட்டன. இவை மட்டுமல்லாது பல குற்றங்களுக்கும் பெருகிவிட்டன.

இவை அனைத்திற்கும் காரணம் இரு தரப்பினர் மட்டுமே.  ஒரு தரப்பினர் பெற்றோர். மற்றொரு தரப்பினர் ஆசிரியர்கள்.

குழந்தைகளின் முதல் பொறுப்பை ஏற்றப் பெற்றோர், தாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனவும், தம் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பதையும் சரிவர அறிவதில்லை. அப்படியே அறிந்துகொண்டிருந்தாலும் அதனை செயல்படுத்துவதில்லை. தாம் பட்ட துன்பங்களைத் தம் பிள்ளைகள் படக்கூடாது என்றும், தம் பிள்ளைகள் மற்றவர்களைக்காட்டிலும் பொருளாதார நிலையில்(மட்டும்) உயர்ந்தோங்கி வாழவேண்டும் என்றும் மிக உயரிய(!?) குறிக்கோளுடனும், மேலும் தம் உற்றார் உறவினரிடம் தம் மானம் பறிபோகக்கூடாது என்ற கொள்கையுடனும், தம் பிள்ளைகளை வளர்க்கின்றனர். வளர்க்கின்றனர் என்பதைவிட அவர்கள் வாழும் காலத்தில் வாழ்கின்றனர். ஏனெனில்  சில சமயங்களில், பெரும்பாலோர் வாழ்வைப் பார்த்தால், அவர்களுடன் வாழ்கின்றனர் என்பது பொருந்தாத சொற்றொடராகிவிடும்.

பெரும்பாலான பெற்றோரும் பிள்ளைகளும் உடலளவில் ஒரே வீட்டிலும் மனதளவில் வெவ்வேறு இடங்களிலும் வாழ்கின்றனர். இதற்கு, பெருகிவரும் மின் உபகரண விளையாட்டு மோகமும், சிறுபிராயத்திலேயே ஏற்படும் குடிப்பழக்கம் முதலான தேவையற்றப் பழக்கங்களும்,   தாந்தோன்றித்திருமணங்களும், விவாகரத்தும், ஏமாற்றுவதும், ஏமாறுவதும், வாழ்வை முடிப்பதும், முடித்துக்கொள்வதும் உதாரணங்களாகக்கொள்ளலாம்.

மனைவியைக் கணவன் மதிப்பதில்லை, கணவனை மனைவி மதிப்பதில்லை, இவர்கள் இருவரையும் பிள்ளைகள் மதிப்பதில்லை. இவ்வாறான சூழலில், எவ்வாறு நிம்மதியான வாழ்வு இருக்கும், எதை கற்பர் மக்கள்?

சம்பளத்திற்கென வேலைபார்க்கும் ஆசிரியர்களும், தம் மாணாக்கர்கள், தமது கடமை இவர்களை சரிகொணர்தல் எனும் கடமையுணர்வில்லாமல் இருக்கின்றனர்.

 

நேர்மை, நியாயம், நன்னடத்தை இவற்றை சரியான முறையில் தெரிந்துகொள்ளாத பெற்றோரும், அடுத்த ஸ்தானத்தில் உள்ள ஆசிரியர்களும், தெரிந்துகொண்டும் கற்றுக்கொடுக்காதவர்களே.  அவ்வாறு கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால், அடுத்தடுத்த சமுதாயம் இழிநிலை செல்லாது. அரசியல்வாதிகளையோ, சட்டத்தையோ, மற்ற எவரையோ குறைக்கூறாமல், தம்மால் இயன்றவரை செய்யலாம்.

பொறுப்புத்துறப்பு என இருதரப்பினரும் இருந்தால் பலன் ஏது?

ஒரு குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என இருக்கும் இக்காலத்திலே, அவர்களுடன் நேரம் ஒதுக்கி, அவர்களை நல்வழிபடுத்த ஒவ்வொரு பெற்றோரும் உறுதிகொண்டால், ஆசிரியருக்கு அதை வழிநடத்த ஏதுவாகும். ஏனெனில் ஆசிரியர்களில் பெற்றோரும் உண்டு.

ஒவ்வொருவரும், தம் பொறுப்புணர்ந்து செயல்பட்டால், எல்லாரும் நல்லவரே, எந்நாளும் நன்னாளே.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*