இந்தியாவின் நிலை?!

விளைப்பொருட்களின் பயன்பாடுதான் இப்படி என்றால், மனித வளம் பெரும்பாலும் இழிவு மற்றும் கொச்சைப்படுத்தப்படுகிறது.

கூலித்தொழிலாளி முதல் குபேரன் வரை தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் வாழ்கின்றனர். இதனாலேயே தனிமனித உழைப்பும், மரியாதையும் இல்லாமல் முகத்தின் முன்னால் ஒன்றும், முதுகின் பின்னால் மற்றொன்றும் நிகழ்கின்றன.

சிறு பொருட்கள் முதல் மிகப்பெரிய பொருட்கள் வரை தரம் குறைவாகவும் சிறு தொழில் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்திலும் பெரும்பாலும் தரம் குறைவு. பணம் ஒன்றே குறிக்கோள். நல்ல தரம் பற்றிய எண்ணமில்லை.

மனித உயிரை மனிதனே மதிப்பதில்லை. தரம் குறைந்த மற்றும் உடலுக்கு தீங்கிழைக்கும் உணவுகள்.

திண்பண்டங்களில் கலப்படம் தரக்குறைவு. ஆனாலும் விற்பனைத் தொடரும். வாங்கி உண்டால் தீங்கு என்ற விளம்பரங்கள் ஒருபுறம், வாங்கி உண்ணத்தூண்டும் விளம்பரங்கள் ஒருபுறம்.

மதியை மயங்க வைக்கும் போதைப்பொருட்கள் மற்றும் உடலையும் சுற்றுப்புறத்தையும் கெடுக்கும் புகைப்பொருட்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கின்றன.

குப்பையை அள்ளுபவரும், சாக்கடையைச் சுத்தம் செய்பவரும், பிணவறையில் மற்றும் பிணத்தை எரிக்கும் அல்லது புதைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே மதுவை உபயோகிக்கலாம் என்ற சட்டம் வரவேண்டும்.

கைகளுக்கு கிடைக்கும் தூரத்தில் தீமையை வைத்துவிட்டு அனுபவிக்க விளம்பரங்களையும் செய்துவிட்டு, பின்னர் மதுவினால் வாகன விபத்து அதனால் இழப்பீடு என அரசு கஜானாவை ஒருபுறம் நிரப்பி மறுபுறம் சிறிதளவு காலிசெய்து ஊர் மக்களை ஏமாற்றும் வித்தையை நன்கு கற்று கடைபிடிக்கின்றன.

காந்தி குஜராத்திற்கு மட்டுமே சொந்தமா? அங்குமட்டும் ஏன் மது பயன்படுத்த தடை.

நல்லனவற்றை செயல்படுத்தவும் மக்கள் ஆரோக்கியமாக வாழவும் வழிசெய்ய அரசுக்கு என்ன தயக்கம்.

மற்றவர்களை ஏமாற்றி அணுஅணுவாய் சாகடிக்கும் இவர்கள் என்ன சந்தோஷம் அடைந்துவிடப் போகின்றனர்.

ஒவ்வொருவரின் மனதிற்கும் தெரியும் அவர்கள் செய்யும் தவறுகள்.

பொருட்களை செய்பவர்கள் அதன் தரம் குறித்து, அக்கறை கொள்வதில்லை. சாலைபோடும் தொழிலாளிகள் முதல் அத்தொழிலை அவர்களுக்கு வழங்கும் அதிகாரிகள் வரை சாலைகளின் தரம் பற்றி அக்கறை கொள்வதில்லை.

இந்தியாவிலிருந்து மற்ற வெளி நாடுகளுக்கு சென்று சாலைகளை போடும் தொழிலாளிகளும் அங்குமட்டும் எவ்விதம் சிறப்பாக செயலாற்றுகின்றனர்? அங்கே, பொது இடங்களில் எச்சிலைத் துப்பாமலும், குப்பைகளைக் கொட்டாமலும்,  சிறுநீர் கழிக்காமலும், இருக்க நம் இந்தியர்களால் முடியும். ஆனால் தனது சொந்த நாட்டை குப்பையாகவும், சுகாதாரமற்றதாகவும் வைத்துக்கொள்ள யார் பயிற்சி அளிக்கின்றனர்?  எவர் அனுமதி அளிக்கின்றனர்?

தண்டனைக்கு மட்டும்தான் மனிதர்கள் அஞ்சுவார்களா? மற்ற நாடுகளில் இல்லாத வண்ணம் இந்தியாவில் மட்டுமே பாதயாத்திரை, கால்களில் செருப்பு அணியாமல் விரதம் இருந்து கோவில் செல்லல் போன்றவைகள் உள்ளன. அப்படிப்பட்ட  இந்தியாவில் மட்டுமே அனைத்து வீதிகளிலும் எச்சில் துப்புவதும், குப்பையை அப்படியே போடுவதும் நடக்கின்றன.

தண்டனைகள்தான் தீர்வென்றால், தனிமனித ஒழுக்கம் என்பது என்ன? சட்டங்கள் மனிதரை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் வாழவகைகளை செய்யவேண்டும். காசு பார்க்க அல்ல. மேலும் சட்டங்கள் மட்டுமே ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்திவிட முடியாது.

அடிப்படை ஒழுக்கமும், கட்டுப்பாடும் அனைவருக்கும் அவசியமானது என அனைவரும் உணரவேண்டும். உணர்ந்து செயல்படவேண்டும்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*