இளம் பருவம்
வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு நிலையும், அழகானது, இனிமையானது மற்றும் வியப்பானது. இவற்றில் இளம்பருவம் என்பது மிகவும் வியப்பானது, சிலநேரங்களில் அபாயகரமானதும், மொத்தத்தில் அவ்விளம்பிராயத்தினருக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் பெரும் சவாலான பருவம் அது.
இப்பருவத்தில் உள்ளோரை அவரைச்சார்ந்தோர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அரவணைத்துச் சென்றால் இந்நிலையை இனிதே கடக்கலாம்.
மற்றவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் இளம்பருவத்தினரிடம் ஓங்கி நிற்கிறது.
இவ்வயதினரின் கருத்துக்களை முதலில் கேட்டு பின்பு அதில் உள்ள நன்மை தீமைகளை அவர்கள் உணரும் வண்ணம் மிகப்பொறுமையாக எடுத்துரைத்தல் அவசியம்.
அவர்களுக்கு பெற்றோரும், உற்றாரும், ஆசிரியர்களும் (தாங்கள் கடந்து வந்த பாதை எனினும், மாறுபட்ட சூழ்நிலை, வசதி வாய்ப்பு, நவீன உபகரணங்கள் மற்றும் மனதைச் சஞ்சலப்படுத்தும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு) இவ்வயதை எட்டிய பிள்ளைகளுக்கு, இனக்கவர்ச்சி, பருவக்கவர்ச்சி, இச்சை, சஞ்சலம் இவற்றைப்பற்றியும், குழந்தைகளாய் இருக்கையில் உரைத்த மற்றவர் தொடுதலில் உள்ள நோக்கம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவேண்டும்.
பிள்ளைகளின், பலம் மற்றும் அவர்களது தனித்துவத்தை அவர்களுக்கு உணரவைக்கவேண்டும். மாபெரும் பலவானான அனுமனுக்கே அவரது பலத்தை மற்றவர் உணர்த்தினால்தான் உணரக்கூடிய தன்மை இருந்ததாக புராணங்களின் வழி அறியலாம். எனவே பிள்ளைகளின் தனித்திறனை அறிந்து கொண்டு அவற்றை மேலோங்கச் செய்யவும், மேலும் தற்சமயம் கிடைக்கக்கூடிய சாதனங்கள், உபகாரணிகளைப்பற்றிய அறிவையும் அளித்து அவற்றை நல்வழியில் பயன்படுத்தி வாழ்வில் உயர வழிவகுக்கலாம்.
ஒவ்வொரு விதையிலும் ஒரு செடியோ, மரமோ உள்ளது. அவ்விதையை எவ்வாறு, எங்கு பயிரிடுகிறோம் என்பதனைக்கொண்டே அதன் பலனை அறியமுடியும். சாதாரண விதையையே காலம் பார்த்து, இடம் பார்த்து விதைத்து, நீரூற்றி, உரமிட்டு வளர்க்கும்போது, ஊன், எலும்பு, குருதி, உணர்வு கொண்ட ஆறறிவுடன்கூடிய மனித விதையை(குழந்தைகளை) அவர்தம் திறமை, அறிவு, சூழலை மனதில் கொண்டு வளர்த்தால் நற்சமூகம் நிச்சயம் அமையும்.
கீழ்காணும் சிலவழிமுறைகளைப்பின்பற்றுவதன் மூலம், இவ்வயதினரின் உளம்சார்ந்த சங்கடங்களைக் கடக்க உதவலாம்.
1. சிறுவயதில் பழக்கிய, ‘நேரம் தவறாமை’யை சற்றும் தளராமல் கடைபிடித்தல்.
2. பெரியோர்களுக்கு மரியாதைத்தருவதை உணர்த்துதல்.
3. காணும் மற்றும் படிக்கும் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு மனதிற்கு உரைக்கும் செய்தி இருக்கும் என உணர்த்தி அதனைக் குறித்துவைக்கச் சொல்லுதல்.
4. சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இவற்றை எச்சூழ்நிலையிலும் தவறவிடாதிருக்க வலியுறுத்துதல்.
5. உண்மைக்கும், பொய்க்கும் உள்ள பலன்களை எடுத்துரைத்தல்.
6. மனம்(எண்ணம்), வாக்கு, செயல் இவற்றை சீரியமுறையில் வைத்திருத்தல்.
7. நற்செயல்களில் ஈடுபாடும், தாம் மேற்கொண்ட செயல்களில் விடமுயற்சியுடனும் இருக்கவைத்தல்.
8. மனத்தூய்மை, உடற்தூய்மை, சுற்றுப்புறத்தூய்மை இவற்றைப் பேணவைத்தல்.
9. மற்றவர்களின் கிண்டல் கேலிகளுக்கு அஞ்சி ஒழுக்கத்தைக் கைவிடதிருக்கும் மனப்பாங்கினை வளர்த்தல்.
10. யாரும் கண்காணிக்காத சமயத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோமோ அதுவே நமது இயல்பு என்பதனை உணர்த்தி, தனிமையிலும் ஒழுக்கத்துடன் இருக்க வலியுறுத்தல்.
இவ்வாறான சிலவற்றை அவர்களைக் கடைபிடிக்கவைப்பதன்மூலம் இளமைப்பருவத்தை சிறந்தமுறையில் கழித்தனர் என்கிற பெருமையை அவர்கள் அடையத்துணைப்புரியலாம்.
இவையனைத்தையும் அவர்கள் கடைபிடிக்க, முதலில் நாம் இவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும். நமக்கென இல்லாவிடினும் அவர்களுக்காக. அப்பொழுதுதான் இக்காலக் குழந்தைகள் என்றில்லை, எக்காலக்குழந்தைகளாயினும் நாம் சொல்வதை மதித்து நடப்பர்.
நாமே சொல்லொன்று செயலொன்று என இருந்தால்……விளைவு…..? சிந்தித்து செயலாற்றுங்கள்.
விடுகதைத் தொடரும்…..
Leave a Reply