விடுகதையா இந்த வாழ்க்கை?
குழந்தைகள்
குழந்தைகளின் உலகம் மிக அருமையானது. தன்னைச்சுற்றி நடக்கும் சூஷ்மங்களை அறிந்துகொள்ள முடியாத பருவம். நம்பிக்கையையும், அன்பையும் ஆணிவேராய் கொண்ட பருவம். குரோதம் இல்லை, பகைமை இல்லை, வெறுப்பில்லை, கோபமும் இல்லை.
தன்னால் இயன்றவற்றிற்கெல்லாம் சிரிப்பதும், இயலாமையின்போது அழுவதும், இயல்பாய் கொண்டுள்ளன குழந்தைகள்.
தொடர்ந்து முயலும் முயற்சி, கடுஞ்சொற்பேசியவரிடமும், நிரந்தர கோபம் கொள்ளாமை. தான் அண்டியவரை நம்புவது, தன்னை சேர்ந்தவரை மகிழ்விப்பது என எவ்வித பொருட்பலனையும் எதிர்பாராமல், அன்பையே பிரதானமாகக்கொண்டு, அனைவர் உள்ளங்களையும் ஆட்சிசெய்யும் தன்மை குழந்தைகளுக்கே உரித்தானது.
கள்ளங்கபடமற்ற உள்ளத்தில் எதனை விதைத்தாலும், அது நன்கு வேரூன்றி வளர்கிறது என்பது திண்ணம். இளகிய களிமண்ணை எவ்வுருவில் வேண்டுமோ, அதற்கேற்றார்போல் வடிவமைக்கலாம். ஆனால் இறுகிய களிமண்ணைப் பதத்திற்குக் கொண்டுவருவதே பெரும் சிரமமான காரியமாகும்.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர். (66)
என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப குழந்தைகளின் மொழியே தனி இனிமையுடையது.
குழந்தைகளின் செயலில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் காணலாம்.
விடுகதைத் தொடரும்…..
Leave a Reply