எண்ணங்கள் வண்ணங்கள்
ஆக்கப்பூர்வமான விமர்சனம்:
விமர்சனம் என்பது செயலை கருத்தில்கொள்ளாமல், செய்தவரை கருத்தில் கொள்வதாய் இருந்தால், அது சரியான விமர்சனமாய் அமையாது.
நமக்கு பிடித்தவராய் இருந்தால் அதற்கேற்பவும், பிடிக்காதவராயினின் அதற்கேற்றாற்போலவும், நமது விமர்சனங்கள் அமையும். எனவேதான் செயல்களை சீர்தூக்கி விமர்சனம் செய்யவேண்டும்.
ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு, முதலில் அவரது செயல்கள் குறித்து சரியாக அறிந்துகொண்டு, நோக்கத்தை தெரிந்துகொண்டு, பின்பே அவற்றைக்குறித்து பேசவேண்டும். ஏதேனும் தவறு இருப்பின், ‘இது தவறு’, ‘இவ்வாறு செய்யாதே’, என்பதைவிட, ‘இது தவறுபோல் தெரிகிறது’, எனவும், ‘இவ்வாறு செய்திருக்கலாம்’ என்றும் சொல்வதன்மூலம், செயல்திறனை அதிகரிக்கலாம்.
அழிவுப்பூர்வமானதாகவும், கோபமானதாகவும் விமர்சனங்கள் இருப்பதற்குப்பதிலாக, பொறுமையுடன், ஆதரவாக, அமைதியாக, மற்றவரின் உணர்ச்சிகளை மதித்து, தெளிவாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருப்பதாக அமைந்தால் நிச்சயம் செயல்திறன் அதிகரிக்கும்.
ஒரு சிறந்த சுயமதிப்புடைய, மற்றவரின் மதிப்பையும் எளிதில் பெறவைக்கும் மாயம், ஒரு சிறந்த விமர்சனத்திற்கு உண்டு. ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான விமர்சனத்திலும், ஒரு திறனாளி மிளிர்வார் என்பதில் ஐயமில்லை.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply