எண்ணங்கள் வண்ணங்கள்
தயக்கமும் அச்சமும்:
எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் நமது ஆழ்மனத்தில் அச்செயலைக்குறித்த ஒரு அச்சம் தோன்றும். இச்செயலை எப்படி செய்வது? என்னென்ன முறைகளைக்கையாளுவது? விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பனபோன்ற எண்ணங்கள் வரும்.
பெற்றொரோ மற்றொரோ கண்டிக்காத வரை ஒரு குழந்தைக்கு எவ்வித அச்சமும் தயக்கமும் எக்காரியத்தைச் செய்யும்போதும் ஏற்படுவதில்லை. அச்செயல்களில் தோன்றிய விளைவுகளின் அனுபவம் மூலமாகவே அக்குழந்தை அதேசெயலை மீண்டும் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ தீர்மானிக்கிறது.
மேலும், குழந்தைப்பருவத்தில் எதற்கும் தயக்கம் என்பதே இருப்பதில்லை. எதைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்றாலும், தயக்கம் சிறிதும் இல்லாமல் நமக்குத் திருப்தி ஏற்படும் வரை பலவாறு யோசித்து, பலவிதங்களில் கேள்விகள் கேட்டு துளைத்துள்ளோம். எதனை செய்யவேண்டும் என்றாலும் சிறிதும் தயக்கம் கொள்ளாமல் செய்துள்ளோம்.
ஆனால் சிறிது வளர்ந்தவுடன் நமக்கு ஒன்றைக்குறித்து உண்மையாகவே சந்தேகம் ஏற்பட்டாலும், புரியவில்லை என்றாலும் கேள்விகள் கேட்பதில்லை. இதுகூட புரியவில்லையா? என்றும் இன்னும் விளங்கவில்லையா என்கிற மற்றவர்களின் கேள்விகளையும், ஏளனங்களையும் எண்ணி நாம் நமது சந்தேகங்களை பெரும்பாலும் வெளிப்படுத்துவதே இல்லை. இத்தகைய அச்சம் மற்றும் தயக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும்.
கற்பது அல்லது தெரிந்துகொள்வது என்கிற நிலையில், நாம் மாணவராக, சிறு பிள்ளைகளாக மாறிவிடவேண்டும். உற்சாகத்துடன் தெரிந்துகொள்ளவேண்டும். இதனை முயற்சித்தால் எதையும் எளிதில் கற்கலாம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply