எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணவேண்டும்,                                                                         திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் அறிவு வேண்டும்.

-மகாகவி பாரதியார்

எண்ணங்கள் வண்ணங்கள்

2. காரணகாரியம்:

காரணமில்லாமல் காரியமில்லை. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமுண்டு. இது ‘பிரபஞ்சத்தின் இரும்பு விதி’ எனப்படும்.

நமது வெற்றி-தோல்விகளும், உடல் ஆரோக்கியமும்-நலக்குறைவும், மகிழ்ச்சியும்-துக்கமும் சில காரணங்களைக்கொண்டே நடைபெறுகின்றன. நமது சில காரியங்கள் அதாவது செயல்கள் மூலமாக மாறுகின்றன.

இருட்டை குறை சொல்வதை விட்டு ஒரு விளக்கை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பது ஸ்காட்லாந்து பழமொழி. நமது வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு நிகழ்வின் விளைவு நமக்குப் பிடிக்கவில்லை எனில், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை களைவது நல்லது.

பிரச்சனைகளுக்கான காரணங்களை கவனமாக ஆராய்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது, அப்பிரசனைகுறித்த கோபம் மற்றும் வருத்தத்தைவிட சிறப்பானது.

ஒரே செயலை ஒரே விதமாக மீண்டும் மீண்டும் செய்துகொண்டே, வித்யாசமான பலன்களை-விளைவுகளை எதிர்நோக்குவது மடமையான செயலாகும்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்ற பழமொழிக்கேற்ப, எச்செயலை எவ்வாறு செய்கிறோமோ அதற்க்கேற்ற பலனே கிடைக்கும்.
தினை விதைத்து அவை வளரும்போது அதனுடன் சில களைகளும் வளரும். அவற்றை கவனமாக களைந்தால், சிறந்த தினையைப் பெறலாம். அதைப்போல, வினையாகிய செயலை செய்யும்போது சில தவறுகள், சில மாற்றங்கள் களைகள் போல் வரலாம். கவனத்துடனும், பொறுமையாகவும் செயல்பட்டால் அவற்றைக் களைவதால் விரும்பிய நற்பலனைப்பெறலாம்.

மேலும், இவற்றிற்கு மனதில் விதைக்கும் எண்ணங்கள் அடிப்படை செயலாகும். நல்ல எண்ணங்களின் விளைவு நன்மையாகவும், எதிர்மறை எண்ணங்களுக்கு அவற்றிற்கேற்பவும் பலன் கிடைக்கும். நம் மனதிற்குள் நாம் செலுத்தும் விஷயங்களில் நமக்கு முழுக் கட்டுப்பாடு உள்ளது. எனவே நல்லெண்ணங்களை மனதில் செலுத்தி நற்பலனைப்பெறுவோம்.

எண்ணங்கள் தொடரும்……

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*