எண்ணிறைந்தத் தத்துவங்களைக்கொண்டதாக இயற்கையை இறைவன் அமைத்துள்ளார். குடும்ப அமைப்பு, உணவு முறை, பழக்கவழக்கங்கள் யாவற்றையும் ஓர் நேர்த்தியுடன், அடிப்படை இயல்புப்படி அமைத்துள்ளார். இயற்கையின் சூழலுக்கேற்ப, அச்சூழலைச்சார்ந்த உயிரினங்களையும் படைத்துள்ளார்.
உதாரணமாக, பனிப்பிரதேசங்களுக்கு ஏற்றார்போல உடலமைப்புடன் உயிரினங்களை உருவாக்கியுள்ளார். மனிதர்களுக்கு, உடலமைப்பு, வீடு, வேலைவாய்ப்பு என தினசரி செயல்களுக்கு ஏற்றார்போலவும், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பனிக்கரடிகள், மாடுகள், ஆடுகள் போன்ற மிருகங்களுக்கு, அப்பனிப்பிரதேசத்தின் குளிரைத் தாங்கிக்கொள்ளும் வண்ணம் உடலமைப்பையும், உணவுமுறைகளையும் அளித்துள்ளார்.
மேலும், எங்கெங்கும் வாழும் பறவைகளுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சத்தை அளித்துள்ளது, பெரும் சிந்தனைக்குரியதாகும். மீன்களைப்பிடிக்க காத்திருக்கும் கொக்கிற்கு மெல்லிய நீண்ட கால்களையும், நீண்ட அலகையும் அளித்துள்ளார். நீரில் மிதந்துச்செல்லும் வாத்து போன்ற பறவைகளுக்கு அதற்கேற்றத் திறனையும், நீரில் நனைந்தாலும் ஈரப்பதம் வெகுவாய் ஒட்டாத உடலமைப்பையும் அளித்துள்ளார்.
இரு சிறு கால்கள் மற்றும் சிறு அலகால் தங்களது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளும் திறமையையும், அதிகாலை முதல் பொழுது சாயும் வரையிலான காலகட்டத்தில் உற்சாகமாக, காலநிலைக்கேற்ப இரையை சேகரித்து உண்டு மகிழ்ச்சியோடு வாழும் முறைமையையும் இறைவன் அளித்துள்ளார்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரவர் நிலைக்கேற்ப, அவரவர் செயல்களுக்கேற்ப இன்ப-துன்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இன்பங்களை அனுபவிக்கவும், துன்பங்களைக் கடந்து செல்லவும் அவ்வவ்வுயிரினங்களுக்கு பக்குவ பரிபாகத்தையும் அருளியுள்ளார் இறைவன்.
சிந்தித்துப் பகுத்து ஆராயத்தெரிந்த, ஆறாம் அறிவையும் பெற்ற, மனிதர்களைவிட, பிற உயிரினங்கள் யாவும் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. பெரும்பாலான மனிதர்கள், இயற்கையை நாசமாக்கிக்கொண்டும், இயற்கைப் பற்றிய புரிதல் இல்லாமலும், இயற்கையின் இனிமையை தொலைத்துவிட்டு வேகவேகமாக வாழ்ந்து, மிக விரைவில் சோர்ந்து போகின்றனர்.
இயற்கையின் இனிமையை உணர்ந்து, இயற்கையோடு இயைந்து வாழ்வதே இயல்பான வாழ்க்கையாகும். இத்தகைய முறையில் வாழ இயன்றவரை முயற்சிப்போம்.
Leave a Reply