பெரியபுராணத்தில் வண்ணங்கள்
சேக்கிழார் பெருமான் இறையருளால் இயற்றிய பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், செயற்கரிய செயல்களை பக்தி மற்றும் தொண்டு என்கிற நோக்கில் செய்த நாயன்மார்களின் வாழ்வியலைப்பற்றி உரைக்கும் உன்னத நூலாகும்.
பெரியபுராணத்தில், இலக்கண இலக்கிய நயம், படிப்போரையும் கேட்போரையும் சிந்திக்கவும் நல்வழிப்படுத்தவும் வைக்கும் நல்கருத்துக்கள் மற்றும் வாழ்வு சீராக்கிக்கொள்ளத் தேவையான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப்பற்றி நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு மூலம் உணர்த்தி வழிநடத்துவது போன்ற சிறப்புகள் பல உள்ளன.
கலைச்சொற்கள் பலவும் பெரியபுராணத்திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று ‘வண்ணம்’ என்னும் சொல்லாகும்.
கம்பர் தனது ராமாயணக்காவியத்தில், வண்ணம் என்ற சொல்லை வேறுவேறு பொருள்களில் கையாண்டு ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். இச்சொல்லை வைத்தே பாதி இராமாயணக் கதையைக் கூறி முடித்து விடுவதாக அறிஞர்கள் கூறுவர். அப்பாடல் வருமாறு:
‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்’
(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)
பெரியபுராணத்திலும் ‘வண்ணம்’ என்ற சொல்லை சில இடங்களில் நிறத்தைக்குறிக்கவும், சில இடங்களில், ‘அவ்வாறே’ என்ற பொருள்படவும், சில இடங்களில் ‘திறம்’ (திறமை) எனப்பொருள்படவும் பயன்படுத்தியுள்ளார் சேக்கிழார்.
பெரியபுராணத்தில் திருமலைச்சிறப்பை கூறும் , ‘உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்…’ (பெ.பு.31) என்னும் வரியில் ‘உள்ளவாறே’ – ‘அவ்வாறே’ என்னும் பொருள்படவும், திருநாட்டுச்சிறப்பு என்னும் பகுதியில், ‘வண்ணநீள் வரை…’ (பெ.பு.56) என்னும் சொற்றொடரானது இமயமலையை குறிப்பதாக அமைந்துள்ளது. ‘…வண்ண நீள்மணி மாலையே…’(பெ.பு.1184) என்னும் வரியில் அழகிய நீண்ட மாலை எனவும், ‘மீள மீள இவ்வண்ணம்…’ (பெ.பு.1240) என்னும் வரியிலும், ‘இவ்வண்ணம் போல எனைப்பல மாக்கள்…’(பெ.பு.1406) என்னும் வரியிலும் இவ்வாறே எனவும், ‘சொன்ன வண்ணமே செய்வது…’ (பெ.பு.1347) என்னும் வரியில் சொன்னவாறே செய்வது எனவும், ‘அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார்போல்…’ என்கிற வரியில் அவ்வாறே எனவும், ‘வண்ணங் கண்டு நான்உம்மை வணங்கி யன்றிப் போகேன்…’ (பெ.பு.1560) என்னும் வரியில் நாவரசர் இறைவனின் திருமேனிக்குறித்துக் கூறுவதாகவும், ‘அடியார்க்கான செய்பணிகள் இன்ன வண்ணம் என்றவர்…’ (பெ.பு.1706) என்னும் வரியில் ‘இவ்வாறு-இத்தகைய’ என்பதைக் குறிக்கவும் ‘வண்ணம்’ என்ற கலைச்சொல்லை அழகுறப் பயன்படுத்தியுள்ளார் சேக்கிழார்.
மேலும், திருநகரச்சிறப்பை உரைக்கும் சருக்கத்தில்,
‘அவ்வண்ணந் தொழுதுரைத்த
அமைச்சர்களை முகம்நோக்கி
மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த
மனுவென்னும் விறல்வேந்தன்
இவ்வண்ணம் பழுதுரைத்தீர்
என்றெரியி னிடைத்தோய்ந்த
செவ்வண்ணக் கமலம்போல்
முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான்’ (பெ.பு.-124)
என்னும் இப்பாடல் வரிகளில் முறையே, ‘அவ்வாறு’, ‘அறவுண்மை’, ‘இவ்வாறு’, ‘சிகப்பு வண்ணம்’ என்னும் பொருள்படுமாறு ‘வண்ணம்’ என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார் சேக்கிழார். மேலும்,
‘இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான்
அந்த மில்புகழ் ஆலால சுந்தரன்
சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்’ (பெ.பு.146)
என்ற பாடல் வரியில் வரும் ‘வண்ணம்’ என்பது ‘அவ்வாறே’ என்கிற பொருளைத்தருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
‘அந்தி வண்ணத் தொருவர்திருவருளால் வந்த ஆரூரர்…’(பெ.பு.3376) என்னும் வரியில் மாலைக்காலத்தின் நிறத்தைக்குறிக்கவும், ‘…சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருவந்தாதி…’(பெ.பு.3800) என்னும் பாடலின் வரியில், சிறந்த நிறத்தையுடைய, பொன் நிறமுடைய என்னும் பொருள் பொதியுமாறு, ‘வண்ணம்’ என்னும் சொல்லைக்கையாண்டுள்ளார் சேக்கிழார்.
திருநீலகண்ட நாயனார் புராணத்தின் ஈற்று பாடல் வரியில், ‘அயலறியாத வண்ணம்…’ என்னும் இடத்தில் அயலில் உள்ளார் அறியாதவாறு என்பதைக்குறிக்கவும், இயற்பகை நாயனார் புராணத்தில், ‘அருமறை முனியை நோக்கி அடிகள்நீர் அஞ்சா வண்ணம்…’, என்னும் இடத்தில் அஞ்சாதவாறு என்பதைக்குறிக்கவும், கண்ணப்ப நாயனார் புராணத்தில், ‘…மழலைத் தீஞ்சொல் வண்ணமென் பவளச் செய்வாய்’ என்னும் இடத்தில் நிறத்தைக் குறிக்கவும், ‘வண்ணம்’ என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார். மேலும்,
‘இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்’. (பெ.பு.692)
‘இவ்வண்ணம் பெருமுனிவர்
ஏகினார் இனியிப்பால்
மைவண்ணக் கருங்குஞ்சி
வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக்
கான்வேட்டை தனியாடிச்
செய்வண்ணத் திறம்மொழிவேன்
தீவினையின் திறம்ஒழிவேன்’. (பெ.பு.790)
‘இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந்
தஞ்சி முன்பு
செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண்
ஊறு தீர்ந்து
கைவண்ணம் நிரம்பின வாசமெல்
லாங்க லந்து
மொய்வண்ண விளங்கொளி எய்தினர்
மூர்த்தி யார்தாம்’ (பெ.பு.989)
இவ்வண்ணம் இரவுபகல்
வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த
அடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
மன்றில்நடங் கும்பிடுவ
தெவ்வண்ணம் எனநினைந்தே
ஏசறவி னொடுந்துயில்வார் (பெ.பு.1065)
இப்பாடல்களின் வரிகளை, ‘இவ்வாறு’, ‘நிறம்’, ‘திறம்’, ‘தன்மை-நிலைமை’ என்னும் பொருளில் ‘வண்ணம்’ என்னும் சொல்லைக்கொண்டு கட்டமைத்துள்ளார்.
இவ்வண்ணம், தம் எண்ணவண்ணம் தான் இயற்றிய நூல் முழுவதையும் வண்ணப்படுத்தும் வண்ணம், ‘வண்ணம்’ என்னும் கலைச்சொல்லைக்கொண்டு பெரியபுராணத்தை மெருகூட்டியுள்ளார் சேக்கிழார் பெருமான்.
Leave a Reply