
விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் நசையுறு மனங்கேட்டேன்.
-மகாகவி பாரதியார்
எண்ணங்கள் வண்ணங்கள்
மனதின்-எண்ணங்களின் ஈர்ப்பு:
நமது மன உணர்வுகள் மூலமாக, எண்ண அலைகள் மூலமாக மற்றவர்களை, பிற காரணிகளை ஈர்க்கமுடியும். நமது எண்ணங்களும் சிறந்த ஆற்றல் படைத்தவைகள்தாம்.
தவயோகிகளும், ஞானிகளும் இருக்கும் இடங்களின் அருகில் வாழும் விலங்குகள் தங்கள் இயல்பான மிருக குணத்தை மறந்து வாழும். தனது பகைமை விலங்குடன் நட்புடன் பழகும் என்பதனை புராணங்களின் மூலம் அறியமுடிகிறது.
மகிழ்ச்சியான ஒருவரால் மற்றவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். நம்பிக்கையூட்டும் வாசகங்களைப்பேசும் மனிதர்களால் பலரும் ஈர்க்கப்படுவது இயல்பே. இலவசங்கள் ஈர்க்கப்படும் மனிதர்களும், கருத்தைக்கவரும் விளம்பரங்களால் ஈர்க்கப்படும் மனிதர்களும் பெரும்பாலோர் உள்ளனர்.
மனதையும்-எண்ணங்களையும் ஈர்க்கும் செயல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் வேலை செய்கின்றது.
இவற்றிற்கு அடுத்தகட்டமே பேச்சால் ஈர்ப்பது. பேச்சு சாதுர்யம் இருந்தால் எளிதில் அனைவரையும் ஈர்த்துவிடலாம். ஆனால், மனதாலும், எண்ணங்களாலும் ஈர்ப்பதற்கு பெரும் பயிற்சி தேவை. அவை சிறந்ததும் கூட.
வாழ்வின் முக்கிய அம்சங்களைப்பற்றி நேர்மறையான, நம்பிகையுடன் சிந்திக்கத் துவங்கும்போது, நமக்கு நிகழும் விஷயங்கள் நமது முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன. இந்நிலையில் காரண காரியங்களை ஆராய்ந்து, நம்பிக்கைக்கொண்டு, நற்பலனை எதிர்பார்த்து, செய்யும் சிந்தனையின்மூலம் மற்றவர்களும் ஈர்க்கப்படுவர். இதனால் நம் உள்ளும் புறமும் நமது எண்ணங்களின் வாயிலாக நேர்மறை விளைவுகளே ஏற்படும்.
எனவே, நமது எண்ணங்களின் மூலமாக நம் வாழ்வின் வண்ணங்களை மாற்றி அமைக்கலாம்.
எண்ணங்கள் தொடரும்…..
Leave a Reply